விரிவானம்

வாங்க, வானத்துக்கு கீழே உள்ள எதப்பத்தினாலும் பேசலாம்

மறுதலித்தல்


மறுதலித்தல்


ஒரு நாள்
இரு நாளல்ல
பல நாள் – கொடும்
பசியுடன்
உன் வாசல் வந்தேன்.
அறுசுவை உணவிருந்தும்
கதவடைத்து சென்றாய்.
எது பசி
எது உணவு
எது அமுது
என் பசி
என் உணவு
என் அமுது
எதுவென நான் உணர்ந்த பொழுது
பின்னொரு இரவில்
மிச்சமிருந்த உணவுண்ண
எனை அழைத்தாய்.
இனி உன் வாசல்
கடக்கையில்
என் கண்கள் குருடாகும்
உன் குரல் கேட்கையில்
செவிகள் திறனற்றுப் போகும்.
என் பசி உன் பசியாகட்டும்
எனக்கானதையும்
நீயே சேர்த்துப் புசி.

நிகழ்வுகள்

உடன்பாடில்லை எனக்கு
இப்போதும் எப்போதும்
புல்லாங்குழல்கள்
அடுப்பூதுவதிலும்
வீணைகள்
விறகாவதிலும்
தூரிகைகள்
துடைப்பமாவதிலும்
இந்த வாழ்க்கை
வாழப்படாமல் கிடப்பதிலும்
இப்படி எனக்கு
உடன்பாடில்லை என்ற போதிலும்
அது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

- மாரீஸ்வரன்.

இது சுயமதிப்பீட்டுக்கான நேரம்...



       நாட்டின் 67-வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அடிமை விலங்கொடித்து, விடுதலை பெற்றதை நினைவு கூர்வது பெருமைக்குரியதுதான்.
     நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைக்கோடி மனிதர் வரை வாழ்த்துக் கூறுவதும், கோட்டை கொத்தளம் முதல் குடிசை வரை கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடா மகிழ்வது அவசியமானதுதான்.
     ஆனால், இது போன்ற விழாக்கள் வெறும் சடங்குகளாக மாறி வருவதும், ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களும் இதை லாப நோக்கத்தில் மாற்றி வருவதும் கவலை தரக்கூடியதாகும்.
     சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் எண்ணற்ற வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியாக மட்டும் இருக்கிறது. மனிதர்களிடையே நல்ல பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பதில் தவறிவிட்டோம். இதனால் இயந்திரத்தனமான ஒரு சமூக அமைப்பு உருவாகி வருகிறது.
     சுதந்திரத்தின் பயனை முழுவதும் அடைந்து விட்டோமா, நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது, வருங்காலத் தேவையென்ன, எப்படி அதை நிவர்த்தி செய்வது, என்ன மாதிரி பிரச்சனைகள் உருவாகும், அதை எப்படி எதிர்கொள்ள எந்த மாதிரி திட்டங்கள் உள்ளன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
     அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரச்சனைகள் இன்னமும் தொடர்வது அவமானகரமான ஒன்றாகும். வறுமை, கல்வியின்மை, அறியாமை, அடிப்படை வசதியின்மை, வேலையின்மை, சமூகத்தில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை, குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
     சாதிச்சண்டைகளும், மதக்கலவரங்களும், இன மோதல்களும் தொடர்கதையாக உள்ளன. நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளும், நெசவாளர்களும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்து வெகுநாளாயிற்று. சுயசார்புடன் வாழ்ந்து வந்த விவசாயிகளும், நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்வதும், நகர வீதிகளில் தினக்கூலிகளாக அலையும் அவலம் காணச் சகிக்கவில்லை.
     நிர்வாக இயந்திரத்தில் ஊழலும், லஞ்சமும் மலிந்து போய் கிடக்கின்றன. முப்போகம் விளைந்த விளை நிலங்கள், ரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் உயிர்ச்சத்தை இழந்து மலடுகளாகி வருகின்றன.
     வளர்ச்சி, மேம்பாடு என்ற பெயரால் காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இவற்றைச் சார்ந்து வாழுகின்ற பழங்குடியினர், விலங்குகள், பறவைகள், வன உயிரினங்கள் எழுப்பும் அபயக் குரல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார சத்தங்களில் அமுங்கிப் போய்விட்டன. நாட்டில் வாழும் மனிதர்களின் கூக்குரலையே மதிக்காதவர்களின் காதில் வன உயிரினங்களின் அழுகுரலா கேட்டுவிடப் போகிறது?.
     பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் காட்டும் ஆர்வமும்,  வரவேற்பும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கிஞ்சிற்றும் இல்லை. கிழக்கிந்திய நிறுவனத்தின் வழியாக வந்த வெள்ளையர்களிடமிருந்து, அளவற்ற தியாகங்கள் செய்து நாட்டை மீட்டுள்ளோம். ஆனால் மீண்டும் அடிமை சாசனம் எழுதும் விதமாக பன்னாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.
     தென் மாநிலங்களுக்கிடையே தண்ணீருக்காக சண்டைகளும், வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் தலைவிரித்தாடும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சுரண்டல்களும், அதற்கு எதிராக தலையெடுக்கும் தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பற்ற நிலையும் கவலைக்குரியன.
     பொதுமக்களுக்கும், அரசுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இவற்றைக் கட்டுப்படுத்தவும், வேருடன் அகற்றவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் கண்துடைப்பாக இருக்கின்றன. இதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து இப்பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண்பதில் காட்டும் ஆர்வம் குறைவுதான்.
     வாக்காளரின் அறிவை மயக்கி எப்படி ஓட்டு வாங்குவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது, எப்படி ஆட்சியைப் பிடிப்பது, எந்தெந்த வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வருவது, எப்படி பணம், சொத்து சேர்ப்பது போன்றவற்றில் காட்டும் ஆர்வத்தை ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும், பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதிலும் சிறிது ஆர்வம் காட்டவேண்டும்.
     ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், ஐ.டி.துறை , வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் வருகை போன்றவற்றால் கலாசாரம், பண்பாட்டில் மிகப்பெரிய சீரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
     கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், தொழில், வணிகம், அரசியல், குடும்ப உறவுகள், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், நெசவு, முன்னேற்றம், தன்னிறைவு என எல்லா நிலைகளிலும் ஒருவித தேக்க நிலை நீடித்து வருகிறது. ஆனால், வளர்ச்சி போன்ற மாயத்தோற்றம் கொண்டு இவை மூடி மறைக்கப்படுகின்றன.
     சுயபரிசோதனை தனிமனிதனுக்கு எப்படி அவசியமோ, அதே போல நாட்டுக்கும் அவசியம். கடந்து வந்த அறுபத்தாறு ஆண்டு கால வரலாற்றை சற்றே நிதானத்துடன் நோக்கினால் நாட்டின் வளர்ச்சியையும், போக்கினையும் அறிந்து கொள்ள முடியும். அப்போதுதான் கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகள், பிழைகள், சறுக்கல்கள், வளர்ச்சி பற்றிய தெளிவு கிடைக்கும்.
     இதை அறிந்து கொண்டால்தான் வருங்காலத்தின் தேவைகளையும், அதை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும், பிரச்சனைகளையும், அதை எதிர்கொள்வதற்கான தீர்வுகளையும் திட்டமிட முடியும்.
     நடப்பு நிகழ்வுகள் சுதந்திரத்தின் நோக்கங்களையும், அரசியல் சாசனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாகவே இருக்கின்றன.
     ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் இதனை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் மோசமான அனுபவங்களையும், விளைவுகளையும் நமது சந்ததியினர் சந்திக்க நேரிடும். சிந்திப்பார்களா...?
      தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
     கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?”

                                 


   





இதற்கு மட்டும்

உன் வீட்டிற்குள் அனுமதிக்க
தடை போடுகிறது
உன் சாதிப் படிக்கல்.

தாகத்திற்கு நீர் கேட்டபோது
தனிக்குவளையில் தந்து
மனிதத்தை அவமானப்படுத்தி
உன் சாதியைப் பெருமைப்படுத்தினாய்

எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட
எங்களின் கடவுள்களைக் காண
தடை விதித்ததில்
உன் சாதித் திருட்டுத்தனம்
ஒளிந்து கொண்டிருக்கிறது

உன் வீதியில்
நடந்து செல்ல
கட்டுப்பாடுகள் விதித்து
கௌரவப்படுத்தினாய்
உன் சாதியை.

என் சகோதரன் சொன்ன நியாயம்
குற்றமெனக் கூறி
வாயில் மலம் திணிக்கச் செய்தது
உன் சாதித் திமிர்

வெறி கொண்ட ஆதிக்கத்தால்
எங்களின் இருப்புகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை உன்னால்

அரவமற்ற வேளையில்
புணர்வதற்காக
என்னை அழைக்கையில்
எங்கடா போச்சு உன்

சாதி
இதற்கு மட்டும்
சாதியில்லையா..

(சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய வரிகள், இப்போதுதான் பதிவிடுகிறேன்)

அம்மா என்றொரு தேவதை





அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!


அம்மா என்றொரு தேவதை

இரக்கமற்ற
நகரத்து வீதிகளில்
தனித்து விடப்பட்ட
முதியவர்களைக் கடக்கும் போதெல்லாம்
ஊரிலிருக்கும் அம்மாவின்
நினைவு வந்து உறுத்துகிறது.

எத்தனையோ பேர்
சொல்லி விட்டார்கள்
தாயின் பெருமைகளை

இன்னமும்
சொல்லிக் கொண்டேயிருக்கலாம்

தாயின் பெருமைகளுக்கு
முடிவேது?

அம்மாக்கள் அனைவரும்
பிள்ளைகளுக்காகவே
எல்லாவற்றையும்
அளித்துவிட்டு
தங்களை
அழித்துக் கொள்பவர்கள்

அம்மாவைப் பற்றிய
நினைவு வரும் போது
தொலைபேசியில்
சில வார்த்தைகள் பேச,
அம்மாவின் அருகாமை தேடும் ஆசை
தணிவதற்குப் பதில்
பெருகி நிற்கிறது

வாழ்வின் கோரங்களில்
கொடுமையானது
பெற்றவரைப் பிரிவது

என்ன சாதித்து
என்ன பயன்?
அம்மாவின் அருகாமையில்லாமல்.

தொடர் துயரங்களால்
நூலறுந்த பட்டமாய்
அலையும் போது
எங்கோ தூரத்தில் துடிக்கும்
அம்மாவின் இதய ஓசை
நம்பிக்கை தருகிறது புதிதாய்

நானூறு மைல்கள் என்ன
எல்லைகள் தாண்டியும்
நீளுகின்ற உறவு
தொப்புள் கொடி மட்டுமே.

தனிமை இரவுகளில்
அம்மாவின் அருகாமை தரும்
மகத்துவம்
சுமைகளாய் அழுத்துகிறது
மனசை.

வாழ்வின் நிர்ப்பந்தங்கள்
பிரிவுகளில் தொடர்ந்தாலும்
முடிவுறுவதில்லை
பாசத்தின் எல்லைகள்

இரவுகளின் நீளம் முடிவற்ற
இரக்கமற்ற நகர வீதிகளில்
மறுபடியும் கரைந்து போகிறேன்
அம்மாவின் நினைவில்
அடுத்த இரவு வரும் வரையில்.


(குறிப்பு: பத்தாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் அம்மாவின் ஏக்கத்தில் எழுதியது.. இப்போது தான் பதிவேற்றுகிறேன்.)

இனியெல்லாம் இன்பமே

இனிய தோழிக்கு,
மகளிர் தின வாழ்த்துகள்!.

உனக்கு கடிதம் எழுத நினைக்கும் போதே உற்சாகம் வந்து மனதில் ஒட்டிக் கொள்கிறது. எனென்றால் மற்ற எல்லா உறவுகளையும் விட தோழமை சிறந்தது. அது உன்னதங்களால் உருவான உறவு. அந்தத் தோழமை உரிமையுடன் உன்னுடன் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆண்கள் செய்கின்ற எந்தப் பணியையும் பெண்களால் செய்ய முடியும் என்ற காலம் போய் ஆண்களால் செய்ய முடியாததைக் கூடப் பெண்களாலும் செய்ய முடியும் என்னும் அளவிற்கு பெண்கள் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
ஆனாலும் பழைய அடிமைச் சங்கிலியை நீ முழுமையாய் அறுத்தெரிவதற்குள் அறிவியல் வளர்ச்சியின் துணையோடு புதிய நவீன சங்கிலிகளால் பளபளப்பாய், கவர்ச்சியாய் நீ பூட்டப்பட்டுக் கொண்டிருப்பது புரியவில்லையா?
எதற்கெடுத்தாலும் ஏன் அழுது தொலைக்கிறாய்?. உனக்கு அழச் சொல்லிக் கொடுத்தது யார்? துன்பமும், துயரமும் வரும்போது அதை தூக்கி எறிய நீ செய்யத்தக்கது ஏதுமில்லையா? அல்லது புரியவில்லையா? காரணகாரியங்களை ஆராய்ந்து அதைக் களைவதுதான் விவேகம் என்பதை உணர். அதை விடுத்துக் கண்ணீர் விடுவது உன் பெண்மைக்கே இழுக்கல்லவா? யாரிடம் சோகமில்லை? யாருக்கு துக்கமில்லை? தொலைக்காட்சித் தொடரில் வரும் பாத்திரத்திற்காக அனுதாபப்படும் நீ உன் பக்கத்து வீட்டில் பட்டினி கிடப்பவனுக்கு முடிந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடு.
காதல் செய்! காதல் உனக்குள் தோழமையாய் வளரட்டும். காதலனின் கொஞ்சு மொழியில் மயங்கி கனவுகளில் நீ மிதந்து கொண்டிருந்தால் உன் கடமைகளைச் செய்யும் காலம் எது?
எதற்கெடுத்தாலும் விதி என்று வீழ்ந்து கிடந்தால் உன் மதி எதற்கு? மதி கொண்டு புது விதி எழுதிட இன்றே புறப்படு.
உன் பெருமையை நீ உணராததால்.........உணர்த்தாததால்தான் கருவறை கூட கல்லறையாய் ஆன அவலம் இன்னமும் தொடர்கிறது. இந்த துயர் போக்க எப்போது தூக்கம் கலைப்பாய்?
முப்பத்து மூன்று விழுக்காட்டிற்கே நீ முட்டிக் கொண்டிருந்தது போதும். மொத்த விழுக்காடும் நீயே எடுத்துக் கொண்டால் என்ன.
மரபுகளும், சட்டங்களும் மனித குல நன்மைக்குத்தானே. உன் நியாய உரிமைகள் மறுக்கப்படும் போது அதை நீ மறுத்து ஒதுக்கு.
தாலி, கற்பு, அச்சம், மடம், நாணம் என உன்னை தலை தூக்க விடமாட்டார்கள். நீ தன்மை இழக்காமல், உன் தனித்துவம் மாறாமல் தகர்த்து எறி.
சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ஓடி ஓடி ரன் எடுத்தது போதும். உன் ஓட்டத்தையெல்லாம் ஒன்று திரட்டினால் இந்த பூமியின் ஓட்டம்கூட புதிதாய் மாறும்.
ஆண்கள் பூட்டிய விலங்கைவிட நீயே உனக்கு பூட்டிக் கொண்ட பொன் விலங்குகள் அதிகம். அதெல்லாம் பொடிப்பொடியாவது எப்போது?
உனக்கு இன்பம் நல்குவதாய் வேடமிட்டு வரும் இன்னல்களை அடையாளம் கண்டு கொள். அதன் முகத்திரை கிழித்து முடுக்கு.
பிரபஞ்சத்தின் மூலாதாரமாய் நீயிருக்கையில் உன்னைச் சுற்றி வட்டமெதற்கு. நீ வட்டத்தை விட்டு வெளியே வந்தால், சூரியக் குடும்பத்துக் கோள்கள் கூட தன் சுற்று வட்டத்தை மாற்றிப் போகும். கல்பனா சாவ்லாக்கள் கிரகங்கள் தாண்டி சரித்திரம் படைக்கையில், நீ நவக்கிரகங்களைச் சுற்றிக் கொண்டு நசிந்து போகிறாயே.
வர்க்கப் புரட்சிக்கு வித்தாய் இருக்க வேண்டிய நீ, வெற்று தர்க்கம் செய்து கொண்டு காலத்தை வீணாக்குகிறாயே.
தந்தை, காதலன், கணவன், மகன் என்று எத்தனை காலம்தான் இவர்களுக்கு சேவகம் புரிவாய். நீ விசுவரூபம் எடுத்தால் விடியல்கள் கூட உன் விழியசைவுக்கு காத்துக்கிடக்கும்.
உன் பெருமைகளும், திறமைகளும் உனக்கு தெரியவில்லை. சின்னச் சின்ன நிகழ்வுகளில் நிலை குலைந்து விடாதே.
உன்னைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் குள்ள நரிகளும், தந்திர ஓநாய்களும், தக்க சமயத்திற்காக காத்துக் கிடக்கின்றன. கவனமாய் நீ இல்லையென்றால் உன் கதை முடித்து இரையாக்கிவிடும்.
மாமியாரும் மருமகளுமாய் போட்டியிட்டுக் கொண்டிருந்தால், மற்ற போட்டிகளில் பங்கேற்பது எப்போது?
நீ போராளி, சமாதானமிக்க போராளி என்பதை எதிரிக்குப் புரியவை. இயன்றவரை சமாதானம். இல்லையென்றால் போர்.
எதுவுமிங்கே நிரந்தரமில்லை. உறவுகளும் அப்படியே. சின்னச் சின்ன சென்டிமென்டுகளில் உன் சிந்தனையை அடகு வைத்து விடாதே.
கலையிலும் இலக்கியத்திலும் உன் பங்களிப்பு கனிசமாகட்டும்.
வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளிவிட்டு மகோன்னதமான பாடல்களை பாட வா. அந்தப் பாடல்கள் எதிர் வரும் உன் சந்ததியினருக்கு தாலாட்டாகவும், தேசிய கீதமாகவும் இருக்கட்டும்.
அடக்குமுறை கண்டு அஞ்சாமையும், போர்க்குணமும் உனக்குள் பூக்க வேண்டும்.
உன் குடும்பம் மட்டுமே உலகமில்லை. உலகமே உன் குடும்பம் என்ற விரிந்த பார்வை வேண்டும்.
நகையிலும், பூவிலும் உன் நாட்டம் இருக்கும் வரை, உனக்கெதிரான புதை குழியிலிருந்து நீ மீள முடியாது.
நீ எழுச்சி கொண்டால் இமயம்கூட உனக்குத் தலை வணங்கும். ஆனால் திருமணத்தின் போது தாலி வாங்கக் குனிந்த உன் தலை நிமிரவேயில்லை. நிமிர்ந்து பார் தோழி.
உன் கருவறையில் அக்கினிக் குஞ்சுகளை அடைகாத்து வை. அந்த அக்கினிக் குஞ்சுகளால் பொய்மையும், தீமையும் பொசுங் வேண்டும்.
பெண்ணே நீ தனி நபர் அல்ல. நீ சக்தி. நீ ஒரு உலகம். உனக்கென்று பொறுப்பும் கடமையும் உண்டு.
உன் வெற்றிக்காக மட்டுமே போர்க்களங்கள் காத்துக் கிடக்கின்றன.
உனக்காக விடியல்கள் திசையெங்கும் திறந்து கிடக்கின்றன.
உனக்காக எல்லாம் காத்திருக்கும்போது ஒதுங்கிப் போய் விடாதே.
ஏனென்றால் உன்னால் பெண்ணினமே நினைவு கொள்ளப்பட வேண்டும். அதுதான் என் விருப்பம். செய்வாயா?